பேச்சு வழக்கில்(colloquial) ஒரு வலைப்பதிவு செய்யும் முயற்சியாக, "விடைத்தாள்" என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன்.
ஒவ்வொறு அப்பாக்களுக்கு தனது மகன் படிப்பிலும் சரி, வேலை பார்த்து சம்பாதிபதிலும் சரி, தன்னோட பெரியாளாக வேண்டும் என்ற ஆசையில், தன் குழந்தைகளோடு நடத்தும் போராட்டத்தில் பலர் வெற்றி பெறுகிறார்கள் சிலர் தோல்வி அடைகிறார்கள். இந்த சராசரி ஆசைகளைக் கொண்ட தந்தைகளில் எனது அப்பாவும் ஒருவர். சிறுவயதில் எனக்கு விளையாட்டுத்தனம் அதிகம். நான் வசித்த தெருவில் நிறைய என்வயசு பசங்க இருப்பாங்க. வீட்டிற்கு வந்தவுடன் உடைகள் மாற்றிவிட்டு, டீ குடித்துவிட்டு மாலை 5:30 விளையாட சென்றால் இரவு 7 மணி அளவில் வீடு திரும்புவேன். சனி ஞாயறு முழுவதும் விளையாட்டுதான். சாப்பிட மட்டும்தான் விட்டிற்கு செல்வது. விளையாட்டுல இருந்த ஆர்வம் எனக்கு படிப்பில் இல்லாததால், அப்பா என்னை அடித்து பார்த்தாங்க, நான் திருந்துற மாதிரி தெரியல. அப்பா வேறு வழியில்லாமல், என் படிப்புக்காக வீட்டையே வேர ஏரியாவுக்கு மத்திடாங்க. இப்படியாக பல போராட்டங்கள்... இதில் சுவாரசியமான ஒன்றை பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்.
எனக்கு பிடிக்காத மூன்று சப்ஜெக்ட் கணக்கு, தமிழ் இலக்கணம், ஹிந்தி. இந்த மூன்று பாடத்தில் மட்டும் கஷ்டப்பட்டு, துன்பப்பட்து, துயரப்பட்டு பாஸ் ஆகுவேன் சில நேரங்களில் பெயில் ஆகிவிடுவேன். 9ஆம் வகுப்பு வரை அப்பா செம்மையா அடிப்பாங்க.
அந்த வயசுல...
"எவன் இந்த எக்ஸாம், மார்க், ரேங்க் எல்லாம் கண்டுபிடிச்சான்..? கண்டுபிடிச்சவன் கையில் கிடைத்தால் குத்தி கொல்லனும்" போல் தோனும்.
பொதுவாக இந்த உலகத்தில் பெண்களுக்கு மிக கொடுமையான தருனம்னு என்று கருத படுறது பிரசவ வலி. ஆனா எனக்கோ ஒவ்வொறு முறையும் தேர்வு முடிஞ்சு, பேப்பர் திருத்தி தரும் தருணம் கொடுமையான தருணம். பேப்பர் திருத்தி கொடுக்குறப்ப வாத்தியார் நல்ல மார்க் எடுப்பியா...? எடுப்பியா...? என்று அடி வாங்குவதும், பின்னர் அப்பாவிடம் அன்சர் பேப்பரில் கையெழுத்து வாங்குரப்ப அடி வாங்குவது என்பது "களத்துமேட்டுல அடி வாங்குற நெற்கதிர்" மாதிரி எல்லா பக்கமும் மாறி மாறி அடிவாங்குவேன். இது போதாது என்று "எரிகிற நெருப்பில் என்னை ஊத்துவது" போல அப்பப்ப வரும் உறவுகாரங்க "பையன் நல்ல படிப்பான? எத்தனாவது ரேங்க்? என் பையன் கணக்குல நூத்துக்கு நூறு!" என்று சொல்லிட்டு போயிருவாங்க. அப்பா என்னை பார்த்து கோபத்தோடு முறச்சி பார்ப்பார். அந்த நேரத்தில் என் மனசுக்குள்ள "யாரவது உங்ககிட்ட உங்க பையன் எத்தன மார்க்குனு கேட்டாங்கலா? எப்படி கோர்த்துவிட்டு போறாங்க பாரு...". என்று தோணும்.

எதிர்பாராதவிதமாக 9அம் வகுப்புல இருந்து என் அப்பா என்கிட்ட நெருங்கி பழக ஆரம்பிச்சாங்க, ஒரு நாள் என்ன கூப்பிட்டு "நீ நூத்துக்கு நூறு மார்க் வாங்குனு கட்டாயபடுத்தமாட்டேன். உன்னால் எவ்வளவு முடியுமோ அளவுக்கு மார்க் எடு போதும். நீ என் தோலுக்கு மேல வளந்துட்ட இனி உன்னை அடிச்சா நல்லா இருக்காது." என்று சொல்லிட்டு "அவனால எவ்வளவு முடியுமோ, அத அவன் முயற்சி பண்ணட்டும், ரொம்ப போர்ஸ் (force) பண்ணா அவனுக்கும் நமக்கும் கஷ்டம்தானே." என்று என் அம்மாவை சமாதானம் செஞ்சாங்க, "எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்..." என ஒரு பைனல் டச் கொடுத்தாங்க. என்னால் முடிந்த அளவு முயன்றேன். ஒருவழியாக +2வில் 76 சதவிகிதம் மார்க் எடுத்து, தேர்ச்சி பெற்றேன். கொஞ்சம் படிப்பு மேளையும் ஆர்வம் வந்தது.
சில பல காரணங்களுக்காக நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். காலேஜ்க்கு முதல் நாள் போறதுக்கு முன்ன என்னை கூப்பிட்டு
"நீ பெரிய பையனா வளர்ந்திட்ட, நான் உன்னை படினு இனி சொல்ல மாட்டேன். காலேஜ்ல இருந்து உன் மேல எந்த ஒரு கம்ப்ளைன்ட் வராம பார்த்து நடந்துகோ." என்று சொல்லி அனுப்பிவைத்தாங்க. ரெண்டாவது செமெச்டர்ல மைக்ரோ பிராசசர் பாடத்தில் அரியர் வைச்சேன். அப்பா ரெண்டு திட்டு திட்டி இருந்தாங்கனா ஒன்னும் தோணாது, ஆனா அப்பா எதும் சொல்லல அது எனக்கு ரொம்ப உறுத்தலாக இருந்தது. ஒரு வழியாக அடுத்த செமேஸ்டர்ல மைக்ரோ பிராசசர் பாடத்த கிளியர் பன்னிட்டேன். மூணு மற்றும் நாலாவது செமஸ்டர்ல எனக்கு பிடிக்காத கணக்கு பாடம் ரெண்டு பேப்பராக இருந்தது.
கணக்கு வகுப்புல கணக்குதான் கொடுமனு நெனச்சேன், ஆனா வந்த கணக்கு வாத்தியார் ஒருமுற தான் என்ன மேலும் கீழும் பார்த்தாரு, என்ன தோனுச்சுனு தெரியல, என்கிட்ட கொஞ்சம் அதிகமா கேள்வி கேட்க ஆரம்பிச்சார், அப்பறம் மட்டம்தட்டவும் ஆரம்பிச்சார் பொண்ணுக முன்னாடி என்னக்கு அவமானமா இருந்தது. அவர் பண்ணது எனக்கு ரோஷம் வந்துச்சோ இல்லையோ எரிச்சல் வந்துச்சு. அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிடா... நம்மல விட்றுவாரு நெனச்சு, கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சேன். மத்த சப்ஜெக்ட்ல நல்ல மார்க் எடுத்துறுவேன் நம்பிக்க இருந்தது. ஆனா கணக்குல மட்டும் அதிக பட்ச குறிக்கோளே பாஸ் ஆகுரதுதான்.
மூன்றாம் செமஸ்டர்ல கல்லூரியில் ரிவிஷன் டெஸ்ட் வச்சாங்க, கணக்கு தேர்வில் என்னக்கு தெரிஞ்சத எழுதிட்டு இருந்தேன், பக்கத்தில் இருந்த என் நண்பன் என்ன பார்த்து எழுதிட்டிருந்தான். அப்ப ரௌண்ட்ஸ் வந்த பிரின்சிபால், என் நண்பன் என்னை பார்த்து எழுதுறத பார்த்துட்டார். வேகமாக வந்து என் பேப்பர பிடுங்கிட்டு போய்ட்டார். எங்க ஹால் இருந்த எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம், பாத்து எழுதுறவன விட்டுட்டு, காமிச்சவன் பேப்பர ஏன் பிடுங்கிட்டு போனாருன்னு?.
மன்னிப்பு கேட்க அவர் ரூமுக்கு போனேன். நான் போறதுக்குள்ள அவர் எங்க அப்பாவுக்கு போன்ல "நான் உங்க பையன் படிக்கும் காலேஜின் பிரின்சிபால் பேசுறேன், உங்க பையன பத்தி பேசணும், நீங்க இந்த வாரத்துல என்ன வந்து பாருங்க." என்று சொல்லிட்டு போன்ன வச்சிட்டார்.
"நீ இப்ப போகலாம் உன் அப்பாட்ட பேசிக்கிறேன்" என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.
அப்பாவும் எதுவும் என்கிட்ட கேட்கல, அதுதான் பிரின்சிபால் சொல்லிட்டார்னு, நானும் எதுவும் சொல்லல. ஆனா எனக்குள் ஒரு பயம் அப்பா என்ன சொல்வாங்கனு.
இரண்டு நாட்கள் கழித்து அப்பா சோகமாக பிரின்சிபால பாக்க போனாங்க. கால்மணி நேரம் கழித்து அப்பா சிரிச்சிட்டே வெழியே வந்தாங்க.
"என்ன அப்பா சொன்னாங்க?" என்று நான் கேட்டேன்.
அதற்க்கு அப்பா
"நீ இன்னொரு பையனுக்கு ஆன்சர் பேப்பரை காட்டினான்ணு சொன்னாங்க.
அதுக்கு நான்,
என் பையனா? விடைத்தாளை இன்னொரு பையனுக்கு காட்டினான?
கேட்கவே சந்தோசமா இருக்குது சார் !!!. என் பையன் ஸ்கூல் படிக்கிறப இவன் தான் மத்தவங்கள பார்த்து எழுதுவான்.
இப்ப இவன் மத்தவங்களுக்கு காட்டுற அளவுக்கு வளர்ந்துட்டானா...!!! கேட்கவே ரொம்ப சந்தோசமாக இருக்குது சார் !!!" என்றேன்.
அதற்க்கு உன் பிரின்சிபால்
"சார் உங்கள் பையன் நல்ல அமைதியான பையன். செழியனோட மதிப்பெண் பட்டியல பாருங்க. நல்லா படிக்கிறான். சில கெட்ட பசங்களோட சேர்ந்து கெட்டுற கூடாது என்ற ஒரே காரணத்துக்காக உங்களை கூப்பிட்டு பேசிகிட்டு இருக்கிறேன்". என்று சொன்னாங்கடா ....
"சரி உன் செலவுக்கு ஏதாவது பணம் வேண்டுமாபா?."
"வேண்டாம்பா." என்றேன்.
"சரிடா நான் கிளம்புறேன்... நேரம்மாயிட்டு... பார்க்கலாம் டா..." என்று சொல்லிட்டு போகும் போது அவர் முகத்தில் ஒரு விதமான சந்தோசத்த பார்த்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது.
இன்று வரைக்கு படிப்பாக இருக்கட்டும், செய்யும் வேலையாக இருக்கட்டும், அப்பாவோட ஆசையை என் மேல் திணித்ததில்ல. அப்பா தந்த பிரீடம்(freedom) என்னக்குள்ள ஏதோ ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது.
இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு படித்ததற்கு நன்றி... மீண்டும் சந்திப்போம்...